• இரண்டாம் நிலை குழந்தை பருவம்

    இரண்டாம் நிலை குழந்தை பருவம்

    ஒரு அந்தி மாலை பொழுதில் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டு இருந்தேன். அது வேளச்சேரி சோதனை சாவடியும் (செக்போஸ்ட்) மடுவாங்கரை பாலத்தையும் இணைக்கும் குறுகிய பாதை (40 அடி பாதை) அதில் என்றும் இல்லாதவாறு ஒரே பேருந்து நெறிசல் ஒலி சத்தம் என் காதுகளை கிழித்துக் கொண்டு இருந்தது.

    அப்போது ஒருவர் ஒரு பொக்கைவாய் கிழவியை கையை பிடித்து கூட்டி கொண்டு வந்தார்.அந்த கிழவியும் மிகவும் பொறுமையாக நகர்ந்து கொண்டு வந்தார். அதை பார்த்தவாறே இருந்தேன். அப்போது அந்த போக்குவரத்து நெரிசலிலும் ஒரு கில்லாடி பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

     

    அந்த பேருந்தில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். நிறுத்தத்தில் இருந்து பயணிகளால் ஏற முடியவில்லை. அப்போது மணி 6.40 அல்லது 6.50 இருக்கும் நான் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே நின்று இருந்தவர்கள் எல்லாம் கடந்த 1 மணி நேரமாக நிற்பதாக சொல்ல நான் கண்டிப்பாக முன்பதிவு செய்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகும் என்று எண்ணிக் கொண்டேன். என்னிடம் அவ்வளவாக சுமை ஒன்றும் இல்லை. இருந்தும் என்னால் அந்த பேருந்திலும் ஏற முடியவில்லை. அவ்வளவு மக்கள் கூட்டம் பேருந்தில்.

    இதற்கிடையில் அந்த பொக்கைவாய் கிழவியை கூட்டி வந்தவர், “அம்மா நான் வேணும்னா ஆட்டோ எடுக்கட்டா? என்று கேட்க அதற்கு அந்த கிழவி “வேண்டாம்பா காசு செலவாகும் நம்ம பஸ்ஸிலியே போலாம் பா! என்ன? என்னாலதான் ஏற முடியாது”

    எனக்கு சமீபத்தில் இறந்த என் பாட்டியின் நினைவு தொற்றிக் கொண்டது. அந்த வயதான மூதாட்டியை பார்க்கும் போது இது எப்படி இந்த நெரிசலில் ஏற போகுது என்று தோன்றியது. என்னால் அந்த மூதாட்டியின் துறுதுறுவென இருக்கும்

    செயல்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூதாட்டிக்கு ஒரு 70லிருந்து 78 வயதிற்குள் இருக்கும். என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அந்த மூதாட்டி நிற்காமல் சென்ற பேருந்தை நோக்கி ஓட முயற்சி செய்தது தான். என்னை அறியாமல்
    என் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அதை துடைத்துக் கொண்டு பேருந்தை நோக்கினேன். மணி 7.30 ஆயிற்று. அப்பவும் எல்லா பேருந்தும் ஒரு மனிதர் கூட ஏறமுடியாமல் சென்றது. கடைசியாக நான் ஆட்டோவை பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுநரை கேட்டேன். “அண்ணா கோயம்பேடு போலாமா?” என்று கேட்க, அதற்கு அவர் “இல்ல தம்பி ஒரே டிராபிக்கா இருக்கும் பா” என்று கூறினார்.

    அந்த ஒரு வழிப்பாதை “ஒரு வழியாக”இருந்தது. மணி 7.40 ஆயிற்று. அதே இடத்தில் நானும் அந்த மூதாட்டியும் நிற்கிறோம். அந்த மூதாட்டி அவர் மகனின் கையை விடவே இல்லை. கடைசி வரை நானும் இது அவனின் கை விடும் விடும் என்று எண்ணி நின்று கொண்டு

    இருந்தேன். அப்போதும் நாங்களும் (மூதாட்டியும் நானும்) பேருந்துகளில் ஏறும் முயற்சியை கைவிடாமல் முயன்றோம். இறுதியாக ஒரு பேருந்தில் நான் ஏற முயன்ற போது அந்த மூதாட்டியும் வந்தாள்… அப்போது படிக்கட்டில் பயணம் செய்யும்

    சில இளைஞர்களை பார்த்து “வழிவிடுங்கள் வழிவிடுங்கள் இல்லைன்னா கீழே இறங்கி ஏறுங்கப்பா” என்று கூறினேன். ஆனால் ஒருவர் கூட வழிவிடவில்லை. நான் ஏறிய பின் திரும்பி அந்த மூதாட்டியை பார்த்தேன் . படியில் ஏற முயற்சி செய்து கொண்டு இருந்தது. இதை அந்த படியில் பயணம் செய்யும் இளைஞர்களும் பார்த்தபடி நின்றனர். என் மனம் குமுறியது. நான் அந்த மூதாட்டியின் கையைப் பிடித்தேன். அப்போது எதிர்பார்க்காத விதத்தில் பேருந்து நகர்ந்தது. ஒருவர் கூட நடத்துனரையோ, ஓட்டுநரையோ தடுக்கவில்லை. சத்தமும் எழுப்பவில்லை. நான் விழபோகிவிட்டேன். எனினும் சுதாகரித்துக் கொண்டு அந்த மூதாட்டியை மேலே ஏற்ற முயற்சி செய்ய அவளின் மகனும் உதவினார். ஒரு வழியாக மூவரும் மேலே வந்தோம்.

    அப்போது அந்த மூதாட்டி அமர இடம் தேடியது. அமர்ந்திருந்த அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர். எனக்கு அந்த கூட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, ஒரு பெண் மாற்று திறனாளி / முதியோர் அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தார். நான் அவர்களிடம் “ப்ளீஸ், இந்த பாட்டிக்கு இடம் கொடுங்க என்று சொல்ல அவர்களும் சலித்துக் கொண்டு எழ.. அந்த மூதாட்டி இரு கைகளையும் கூப்பி என்னைப் பார்த்தது. எனக்கு அழுகை வந்தது. என் மனதில் “இது என் கடமை” என்று கூறிக் கொண்டு பயணச் சீட்டு வாங்க போய்விட்டேன்.

    கோயம்பேடும் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிவிட்டேன். ஆனால் மனதில் ஒரே சலசலப்பு. “எப்படி! அந்த பொக்கைவாய் கிழவி எப்படி வீட்டிற்கு போகும்”. இந்த போக்குவரத்து நெரிசலில் எப்படி சாலையைக் கடக்கும். இப்படியாக வந்து கொண்டே இருந்தது எண்ணம். மறுபுறம் இரண்டாம் நிலை குழந்தை பருவத்தை நினைத்து மகிழ்வதா , பயப்படுவதா? அல்லது வருத்தப்படுவதா என்று தோன்றியது. இந்த நகரத்தில் (நரகத்தில்) எப்படி இந்த மூத்த குடிமக்கள் வாழமுடியும்.

    “கத்தார்சிங், பகத்சிங், அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு, வாஞ்சிநாதன் போன்ற இளைஞர்கள் பிறந்த இந்த இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அந்த பேருந்தில் யாரும் முன்வரவில்லையே என்று தோன்றியது”.

    நான் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் என்னால் மூத்த குடிமக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கையில் இளைய சமூகம் யாவும் அந்த குழந்தை போன்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பது என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.

     

    ‘எங்கேயாவது பேருந்தில் முப்பனோ , மூதாட்டியோ நின்று கொண்டிருந்தால் தயவு செய்து அமர இடம் கொடுங்கள் மாறாக தலையை திருப்பிக் கொள்ளாதீர்கள். நாம் தான் நம் மூத்த குடியை பாதுகாத்து அரவணைக்க வேண்டும். இவர்களின் நிலைமை நீஙகள் நினைப்பது போல் சாதாரணம் அல்ல. நீங்கள் எங்கேயாவது மூத்தகுடி மக்களை பாருங்கள் அவர்களின் கஷ்டம் அப்பொழுது உங்களுக்கு தெரியும். பின்பு நீங்களாகவே உதவி செய்வீர்கள்.

    அவர்களும் நம் அம்மா அப்பாதான் ! ! 

     – பொள்ளாச்சி அருண்பாலாஜி

    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on December 18, 2011 · Filed under: Article, Society, Story, Useful; Tagged as: , ,
    No Comments

Leave a Reply