• இரும்பு திரைக்கு அப்பால்…ஆங் சண் சூகி

    மியான்மாரின் அடக்குமுறை ராணுவ அரசுக்கு எதிராக இருபதாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருபவர் ,பர்மிய காந்தி என்றும் , “தி லேடி” என்றும் மக்களால் அழைக்கப்படும் ஆங் சண் சூகி , கடந்த பதினைந்து வருடங்களில் அனேக நாட்கள் சிறையில் தனிமையில் கழித்தவர் .அண்மையில் 2011 ஆம் ஆண்டு அவரை மியான்மார் ராணுவ அரசு விடிவித்தது. வருடந்தோறும் பி.பி.சி யில் ரெய்த் சிறப்புரைகள் ஒளிபரப்பப்படும் .அவ்வகையில் இவ்வாண்டு சூகி இரண்டு ரெய்த் உரைகள் ஆற்றியுள்ளார் .விடுதலை (liberty) எனும் தலைப்பில் தனது முதலுரையை ஆற்றியுள்ளார்  .முழு உரையும் இங்கு மொழிபெயர்க்கப்படுகிறது .(மொ.பெ- சுகி ) .நேர்காணல் பகுதியும் உண்டு அதில் முக்கியமானவற்றை சிறு சிறு பகுதிகளாக மொழிபெயர்த்தளிக்க முயல்கிறோம் .
    சூகியின் போராட்ட வாழ்க்கையை பற்றி அவர் சொல்வதை கேட்கும் பொழுது ,சுதந்திரம் என்றால் அந்நாட்டு மக்களுக்கு என்னவென்று அவர் விளக்கும் பொழுது ,உண்மையில் நாம் அனுபவித்துவரும் சுதந்திரத்தின் பெருமை கொஞ்சமேனும் பிடிபடுகிறது .மானுடம் தன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் ஒவ்வொரு அடக்குமுறைக்கு எதிராக கிளர்த்து எழுந்தே தீரும் ,அது எத்தனை உயர்வானதாக ஜோடிக்கப்பட்டாலும்.இன்னும் ஜண்டா அரசின் அடக்குமுறைக்கு அங்கு ஓர் விடிவு பிறக்கவில்லை,ஆனாலும் தனது வாழ்வின் முக்கிய பகுதிகளை தனிமையில் சிறையில் பல வருடங்கள் கழித்தும் சூகியின் குரலில் சோர்வு இல்லை.உடைந்து வீழ்ந்து விடாமல் ஒளிவிடும் நம்பிக்கையோடு தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார் .மானுடம் வெல்லும் அந்த மாபெரும் தருணத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஆங் சண் சூகி .
    இப்பொழுது உங்களுடன் பி.பி.சி மூலம் பேசுகிறேன் , இது எனக்கு தனிப்பட்டவகையில் முக்கியமானது .இதன் மூலம் , நான் மீண்டும் சட்டப்பூர்வமாக சுதந்திர பிறவி என்பதை உணர்கிறேன். நான் சட்டப்பூர்வமாக வீட்டுக்காவலில் ,சுதந்திரமற்று வாழ்ந்த பொழுது, பி.பி.சி என்னிடம் தினமும் பேசியது , நான் அதை வெறுமனே கூர்ந்து கேட்டுக்கொண்டேன் .ஆனால் அப்படி கேட்பது கூட எனக்கு ஒரு வித சுதந்திரத்தை அளித்தது , நம்மை சுற்றி இருக்கும் பிறரின் மனங்களை நோக்கி நான் பயணமானேன் .அது தனிமனித உரையாடல்கள் போல் இல்லை தான் , ஆனால் அதுவும் ஒருவகையில் எனக்கு மனிதர்களின் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தது .உங்களது எண்ணங்களை , உங்களது நம்பிக்கைகளை , உங்களது மகிழ்ச்சியை , சில நேரங்களில் உங்களது கோபங்களையும் வெறுப்பையும் கூட பகிர்ந்துகொள்ள மனிதர்களின் துணை வேண்டும் .சக மனிதர்களோடு தொடர்பில் இருப்பதும் ஒரு சுதந்திரம் தான், அது எந்நிலையிலும் எவருக்கும் மறுக்கப்படக்கூடாது .நேரடியாக இன்று உங்கள் முன் என்னால் தோன்றமுடியவில்லை என்றாலும் ,சுதந்திரமற்ற நிலையில் உலகெங்கிலும் அவதி படும் பலருக்கும் ,எனக்கும் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பகிரவிருக்கிறேன் ,அப்பகிர்வை சாத்தியப்படுத்திய மனித தொடர்புக்கான சுதந்திரம் எனக்கு கிடைத்ததற்கு நன்றிவுடயவளாக இருக்கிறேன் .
     தெயவாதீனமோ இல்லை தீர்க்கதரிசனமோ இல்லை இரண்டுமோ ,தெரியவில்லை , நான் முதன்முதலில் வாசித்த சுய சரிதை ஒரு ஹங்கேரிய பெண் எழுதிய ஏழு வருட தனிமை (seven years of solitary) எனும் சரிதை தான் .1950 களில் கம்யுனிஸ்ட் இயக்க களையெடுப்பின் சமயத்தில் எதிர் முகாமில் தவறுதலாக சிக்கிக்கொண்டவர் .ஒரு 13 வயது சிறுமியாக அப்பெண்ணின் அபார மன துனிவினாலும் கூர்மையான அறிவினாலும் தனது மனதை நிலையாகவும் ஆன்மாவை சிதைந்து விடாமலும் தன்னை காத்துக்கொண்டு பல வருடங்கள் போராடினாள், அவளது மனித தொடர்புகள் நித்தமும் அவளை சுற்றி இருந்த ஆண்களோடு மட்டும் தான் , அந்த ஆண்கள் தொடர்ந்து விடாது அவளது ஆன்மாவை உடைத்து சிதைக்கவே முயன்றனர் .
    விடாது தொடர்ந்து எதிர்த்து ,எதற்கும் இணங்காது போராடவேண்டும் என்று முடிவை எட்டிவிட்டால் , மிக முக்கியமான அடிப்படை தேவை எதையும் சாராது வாழ பழக வேண்டும், இன்னும் சொல்வதானால் அப்படி வாழ்வதே அவர்களின் வாழ்வின் பெரும்பங்கு வகிக்கும் .தங்களை தாங்களே வருத்திகொள்ளும் பாதையை எவர் தான் தேர்ந்தெடுப்பார் ?.மாக்ஸ் வேப்பர் ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய மூன்று முக்கிய குணாம்சங்களை பற்றி பேசுகிறார் , அவை பேரார்வம் , பொறுப்புணர்வு மற்றும் எதற்கு முன்னதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் புரிதல்  ஆகியவைகள் ஆகும். முதலில் அவர் கூறும் பேரார்வம் என்பது – ஒரு உன்னத நோக்கத்திற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்தல் .இப்படி இனங்கமருத்து போராடும் ஆபத்தான அரசியலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் இத்தகைய ஒரு பேரார்வம் அவர்களின் ஆழத்தில் இருந்தாக வேண்டும். ஒழுங்கற்ற நியதிகளும் விதிமுறைகளும் அமைந்த வேறொரு உலகம் அது, அங்கு சராசரி சக குடிமகன்களை போல வாழ்ந்திட முடியாது .
    .
    வெளிப்புற அடையாளங்களை கொண்டு மட்டும் குடியுரிமைகளை இவ்வுலகில் அங்கீகரிக்க முடியாது .வார நாட்களில் என்றாவது எங்கள் என்.எல்.டி(NLD) கட்சி தலைமையகத்துக்கு வாருங்கள், கரடு முரடான ,காற்றோட்டமிக்க ,சிதைந்த எளிய கட்டிடம் .பலமுறை அதை என்.எல்.டி யின் மாட்டுகொட்டடி என்று பலரும் குறித்துள்ளனர் .இக்குறிப்பை பொதுவாக பலரும் சிரித்துகொண்டே அன்பொழுக சொல்வதினால் அதை நாங்கள் எப்பொழுதும் தவறாக எண்ணியதில்லை .உலகத்தின் மிக முக்கியமான போராட்டம் ஒன்றும் கூட கொட்டடியில் தானே தொடங்கியது ?
     எங்களது நெருக்கடியான , ஒழுங்கற்ற அலுவலகத்தில் எளிய மனிதர்களை சந்திக்கலாம் .பெறும் கவிஞர் போல முறையற்று முடிவளர்த்திருக்கும் அந்த வயதான பெரியவர் ஒரு பிரபலாமான பத்திரிக்கையாளர் ,அது மட்டுமில்லை அவர் பர்மிய சுதந்திர போராளிகளில் தலையாவரும் கூட .இருபது வருடம் தனது கொடுமையான சிறை தண்டனை காலம் முடிந்த பிறகு வெளியில் வந்த அவர் , அங்கு தனக்கு நேர்ந்த வாழ்வனுபவங்களை “இஸ் திஸ் எ ஹுமன் ஹெல் “? எனும் புத்தகமாக எழுதிவருகிறார் .அவர் எப்பொழுதும் சிறையில் அணிவது போல நீல நிற உடையையே அணிவார், தன்னை போல் பலரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை நினைவில் தொடர்ந்து நிறுத்திக்கொள்ள ஒரு யுத்தி.முகத்தில் கவலையின் ரேகை படர்ந்து இருக்கும் இந்த கண்ணாடி போட்ட பெண்மணி ஒரு மருத்துவர் .ஒன்பது வருட சிறைவாசம் அனுபவித்தவர் , மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியில் வந்ததிலிருந்து எங்களது கட்சியின் சமூக மற்றும் மனிதாபிமான பணிகளை கவனித்து வருகிறார் . பழகுவதற்கு இனிமையான என்பது வயதுகளை கடந்த பல பெண்களும் இங்கு உண்டு .
    1997 லிருந்து தொடர்ந்து எங்களது அலுவலகத்திற்கு அவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். அவ்வருடங்களில் பெறும் சுனாமி போல் எழுந்த அடக்குமுறையின் அலைக்காரனமாக , ஜனநாயக போராளிகள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர் .எங்களது கட்சி கூட்டங்களின் பொழுது , சிறை சென்றவர்களின் மனைவியர்களையும் , குழந்தைகளையும் அவர்களது வயதான பெற்றோர்களையும் ஜண்டா அரசுக்கு எதிராக திரட்டி நாங்கள் தோற்றுவிடவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த முயன்றேன் .சிறை செல்லாது இருக்கும் நாங்கள் சிறை சென்றவர்களின் போராட்டத்தை எங்களுக்கானதாக ஏற்று அதை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டோம் . இங்கு இருக்கும் இந்த வயதான பெண்களில் பலரும் அப்படி அந்த தீவிரத்துடன் இங்கு வந்தவர்கள் தாம் , இப்பொழுதும் அத்தீவிரம் சற்றும் அவர்களிடத்தில் வலுவிழக்கவில்லை .
    எங்கள் கட்சி அலுவுலகத்தில் பல ஆண்களையும் பெண்களையும் நீங்கள் பார்க்கலாம் , பர்மிய அரசாங்க கூற்றின் படி அவர்களை ” சரியான வயதுடையவர்கள் ” என்று வரையறுக்கலாம் .அதாவது இப்பொழுது அவர்களது வயது நாற்பதுகளில் இருக்கும் , இயக்கத்தில் அவர்கள் சேரும் பொழுது அவர்களின் வயது இருபதுகளிலோ அல்லது பதின்ம பருவத்தின் விளிம்புகளிலோ இருந்திருக்கக்கூடும் .பெறும் உற்சாகத்தோடு, கண்களில் பளிச்சிடும் ஒளியோடு, மலர்ந்த முகத்தோடு , கொண்ட நோக்கத்தின் பால் ஒரு பேரார்வத்தொடும் திகழ்ந்தனர் .இப்பொழுது அவர்கள் மேலும் அமைதியாக ,அறிவு முதிர்ச்சியோடு அபார மனத்திண்மை உடையவர்களாக , அவர்கள் அனுபவித்த தண்டனை அவர்களது பேரார்வத்தை சரியாக சீரிய முறையில் அதற்கோர் வடிவத்தை கொடுத்தது .அவர்களிடத்தில் நீங்கள் எப்பொழுதாவது சிறை சென்று இருக்கிறீர்களா என்று கேட்பது தவறாகும், மாறாக எத்தனை முறை சிறை சென்றுள்ளீர்கள் என்று கேட்க வேண்டும் .
    இங்கு பல இளைஞர்கள் இருக்கிறார்கள் , ஆனால் அவர்களுக்கு தீவிர விசாரணையோ , இல்லை சிறைவாசமோ ஒன்றும் புதிதல்ல .அவர்களின் முகங்கள் நம்பிக்கையின் ஒளியில் சுடர்கிறது ஆனால் அதில் உக்கிரமில்லை ,மாயையின் போலி பொலிவேதும் அங்கில்லை .தாங்கள் எதில் ஈடுபடுகிறோம் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர் , தங்களை எதிர்காலத்திடம் எவ்வித மனத்தடயுமின்றி ஒப்படைத்து கொண்டுவிட்டனர்  .நம்பிக்கையே அவர்களது ஆயுதம் , பெறும் முனைப்பே அவர்களது கேடயம் .எதற்காக இந்த முனைப்பு ? வளமான தங்களது இயல்பு வாழ்வை துறந்து எந்த நோக்கத்திற்காக தங்களை இப்படி வதைத்துகொள்கிறார்கள் இவர்கள் ? வாக்லாவ் ஹவெல் சொல்வது என்னவென்றால் , கீழ்படியாது போராடுபவர்களின் அடிப்படை கடமையாக நேர்மையோடு ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் எனபதே  .வேறு வார்த்தைகளில் சொல்வதானால் , சுதந்திரமே எங்கள் பெருமுனைப்புக்கான காரணம் ,மதங்களை போல் அரசியலிலும் சுதந்திரம்  பொருட்டு துயரங்களை வலிய சென்று ஏற்றுகொள்கிறோம், எங்களை கடந்து செல்லும் தேவையில்லாத ஒன்றை வலிய சென்று எடுப்பது போல் இது,இம்முடிவை எட்டுவது அத்தனை சுலபமில்லை , நாங்கள் வதைவிரும்பிகள் (masochists) அல்ல , எங்களது நோக்கத்தின் மீது எங்களுக்கு இருக்கும் அதீத நாட்டம் மற்றும் மதிப்பின் காரணமாக நாங்கள் எங்களையும் மீறி துன்பங்களை வலிய சென்று ஏற்கிறோம் .
    வடக்கு பர்மாவில் உள்ள சிறிய நகரமான டபாயினுக்கு நானும் எங்களது கட்சி ஆதரவாளர்களும் மே 2003 ஆம் ஆண்டு பிரச்சாரத்திற்காக வாகனங்களில் ஊர்வலம் சென்றோம் , அப்பொழுது ஒரு கும்பல் எங்களை சுற்றி வளைத்து தாக்கியது .தாக்குதலில் ராணுவ ஜண்டா அரசுக்கு பங்கிருக்குமோ என்று சந்தேகம் இருக்கிறது . எங்களை தாக்கியவர்களை பற்றி இன்று வரை எந்த தகவலும் இல்லை , மாறாக தாக்குதலுக்கு ஆளாகிய நாங்கள் கைதுசெய்யப்பட்டு சிறயிலடைக்கபட்டோம்.என்னை இன்சீன் தனிசிறையில் கொண்டடைத்தனர் . ஆனால் இதையும் சொல்லவேண்டும் , என்னை சிறைசாலையிலிருந்து சற்று தூரத்தில் கட்டப்பட்ட சிறிய பங்களாவில் ஓரளவு வசதியான சிறையில் தான் அடைத்தனர் .
    ஒரு நாள் காலையில், நான் எனது வழக்கமான உடற்பயிற்சிகளை செய்துகொண்டிருந்தேன் , உடலை நல்ல முறையில் ஆரோகியமாக பேணுவதை ஒரு அரசியல் கைதியின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன் .அப்பொழுது இது உண்மையில் நானில்லை என்றுணர்ந்தேன் .என்னால் இப்படி அமைதியாக அடுத்த வேலைகளை செய்து கொண்டிருக்க முடியாது .மெத்தையில் பலகீனமாக சுருண்டு படுத்துக்கொண்டு , என்னோடு டபாயின் வந்தவர்களின் விதியை எண்ணி எண்ணி கவலையுற்றுருப்பேன் .எத்தனை பேருக்கு பலத்த அடி கிடைத்து இருக்குமோ ? யாருக்கும் தெரியாத இடங்களுக்கு எத்தனை பேரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்களோ ? எத்தனை பேர் மரித்தார்களோ? கட்சியின் மற்றவர்கள் என்ன ஆனார்கள் ? பயமும் , எதுவும் நடந்திருக்கலாம் எனும் நிச்சயமற்ற தன்மையும் என்னை அமிழ்த்தி இருக்கும் .இது நானில்லை ,இங்கு உடற்கட்டை பேணும் வெறிகொண்டவள் போல் நான் முழு சுவாதீனத்தோடு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் .
    அப்பொழுது எனக்கு அகமொடோவின் இவ்வரிகள் நினைவில் இல்லை ” இது நானில்லை ,இங்கு துன்புறுபவர் வேறொருவர் , என்னால் இங்கு நடந்தவைகளை நிச்சயம் எதிர்கொண்டிருக்க முடியாது .”
    வெகு நாட்களுக்கு பின்பு ,நான் மீண்டும் எனது வீட்டில் சிறைவைக்கப்படும் பொழுது தான் எனக்கு இவ்வரிகள் நினைவுக்கு வந்தது .இவ்வரிகள் நினைவுக்கு வந்த அந்நொடியில் எங்களுக்குள் இருக்கும் உறுதியான  பிணைப்பை உணர முடிகிறது.எங்களுக்கு ஆற்றலும் பொறுமையும் அதிமுக்கியமாக தேவைப்படும் ,வீழ்ந்து ஒடுங்கும் காலங்கள் தோறும் எங்களது உள் ஆற்றலையே நாங்கள் பெரிதும் நம்பி இருக்கிறோம் .
    கவிதை காலத்தையும் தூரத்தையும் கடந்து நின்று மனிதர்களை ஒன்றாக இணைக்க வல்லது .நீல நிற சிறை உடையை உடுத்தி இருக்கும் , யு .வின் .டின் ராணுவ விசாரணைகளை தாங்கி தாக்குபிடிக்க ஹென்லேயின் “இன்விக்டசின்” துணையை நாடினார் .இக்கவிதை எங்களது சுதந்திர போராட்ட காலங்களில் எனது தந்தைக்கும் அவர்களது சகாக்களுக்கும் பெறும் உந்துதலை அளித்தது ,அதே போல் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சுதந்திர போராளிகளுக்கு உந்துதல் அளித்து வந்துள்ளது .போராட்டங்களும் துன்பங்களும் , தலைவணங்காமல் நிமிர்தலும் , சில நேரம் மரணமும் கூட சம்பவிக்கிறது ,இப்படி எத்தனையோ .இவை அத்தனையும் விடுதலைக்காக .அப்படி எந்த மாதிரியான சுதந்திரத்துக்காக நாங்கள் இப்படி ஆர்வத்தோடு முனைகிறோம் ? பாடப்புத்தங்களில் உள்ள விடுதலை விளக்கங்கள் எங்கள் போராளிகள் பொருட்படுத்துவதில்லை .
    இன்னும் கொஞ்சம் அழுத்தி விடுதலையின் பொருள் பற்றி கேட்டால் ,ஒவ்வொருவருக்கும் அவரகளது இதயத்தை ஒட்டி சில கருத்துக்களை வரிசையாக கூறுவார்கள் , அரசியல் கைதிகள் இருக்கக்கூடாது , பேச்சுரிமை , தகவலுரிமை, இனைந்து செயல்படும் உரிமை அல்லது விருபத்திகேற்ப அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அல்லது ஒட்டுமொத்தமாக எளிமையாக சொல்வதானால் -நாங்கள் செய்ய விரும்புவதை செயல்படுத்தும் உரிமை என்று சொல்லலாம் .இத்தகைய புரிதல்கள் பார்வைக்கு வெகு எளிமையாக படலாம்.ஆம் இது ஓர் அபயாகரமான எளிமைபடுத்துதல் தான் ,ஆகினும் கூட இவ்வகை புரிதல்கள் விடுதலை என்பதை தொடர் திட்டமிட்ட களப்பணிகள்   மூலம் அடைய பெறும் ஒன்றாக ,மக்களுக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது,மாறாக அது வெறும் மெய்யியல் வாதங்கள் மூலம் அடயபெரும் கருத்தியல் வெற்றி மட்டும் அல்ல .
    ஒவ்வொருமுறை வீட்டுக்காவல் முடிந்து வெளிவரும் பொழுது என்னிடம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி “சுதந்திரமாக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள் ?” எப்பொழுதும் அவர்களுக்கு நான் கூறும் பதில், எனக்கு எவ்வித வித்யாசமும் தெரியவில்லை என்பதே. காரணம் நான் மனதளவில் சுதந்திரமாகவே இருக்கிறேன் .நமது ஆன்மாவோடு நமக்கு இருக்கும் இணக்கத்தின் விளைவாக உள்ளிருந்து ஒரு சுதந்திரம் பீறிடும் என்று அவ்வபொழுது இதை பற்றி பேசி வருகிறேன் .இசையா பெர்லின் இப்படி உள்முகபடுத்தபட்ட சுதந்திரத்தை பற்றி தனது எச்சரிக்கையை பதிவு செய்கிறார் ,”தார்மீக வெற்றியை போல் ஆன்ம விடுதலை என்பதை அடிப்படை அன்றாட சுதந்திரம் மற்றும் எளிய நடைமுறை வெற்றியிளிருந்தும் பகுத்து புரிந்துகொள்ள வேண்டும் .இல்லையேல் விடுதலையின் பெயரால் நடைமுறையில் இருக்கும் அடக்குமுறையை ஞாயபடுத்துதளுக்கும் விடுதலையின் கோட்பாடுகளுக்கும் இடையில் அபாயகரமான குழப்பங்கள் நிகழும் .
    உண்மையில் ஆன்மீக விடுதலையை மட்டும் மற்ற அனைத்து அடிப்படை சுதந்திரங்களுக்கு மாற்றாக ஏற்றுகொண்டால் அபாயாமான மந்தத்தன்மையும் விட்டேந்தி பாவமும் குடிபுகும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது .ஆனால் இந்த உள்ளார்ந்த விடுதலையுணர்வு அடிப்படை சுதந்திரம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி போன்றவைகளை  பெற தொடர்ந்து  போராட உரிய செயலூக்கத்தை கொடுக்கும். ஆசைகளிலிருந்து கிடைக்கும் விடுதலையையே பௌத்தம் உச்சகட்ட விடுதலையாக முன்வைக்கிறது .அப்படியானால் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை முன்னிறுத்தி சுதந்திரத்தை லட்சியமாக கொண்ட இயக்கங்களுக்கு புத்தரின் போதனைகள் எதிரானவை என்று வாதிடலாம் தான் .2007 ஆம் ஆண்டு பௌத்த துறவிகள் திடிரென்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை பொருட்டு  மெட்டா ஊர்வலம் (அதாவது அன்பும் கருணையும் தன் அம்சங்களாக  கொண்ட) போராட்டங்களை நடத்தினர், பெட்ரோல் விலையேற்றத்தால் உணவுபொருடகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது .அவர்களது ஆன்மீக பலத்தை கொண்டு மக்களின் அடிப்படை தேவையான உணவுக்காக போராடினர் .

    ஆன்மீக விடுதலையில் நாட்டம் என்பது மனிதர்கள் மனிதர்களாக வாழ தேவைப்படும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் பால் அக்கறையின்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது .வெகு முக்கியமான அடிப்படை உரிமையாக நான் கருதுவது ,பயத்திலிருந்து கிடைக்கும் விடுதலையை  தான் பர்மாவில் ஜனநாயக போராட்டங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே நாங்கள் எங்கள் சமூகத்தில் பரவி இருக்கும் பயத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம் .
    பர்மா வரும் வெளிநாட்டவர்கள் அநேகர் கூறுவது ,பர்மியர்கள் நன்கு உபசரிக்கின்றனர் ,இனிமையாக பழகுகின்றனர் என்பதே. மேலும் அவர்கள் கூறுவது, பர்மியர்கள் பொதுவில் அங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க பயந்து தயங்குகின்றனர் என்பதே .சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாம் களைய வேண்டிய முதல் எதிரி பயந்தான் ,ஆனால் இறுதி வரையில் நீடித்து இருப்பதும் அது தான் .பயத்திலிருந்து முழுவதாக விடுபடவேண்டும் என்பது கூட தேவையில்லை .நமது பயத்தையும் தாண்டி நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அளவிற்கு துணிவிருந்தால்   போதும்.அதற்கு அபார துணிவு வேண்டும் .
    “இல்லை, நான் பயப்படவில்லை . சிறையின் இரவுகளில் ஒரு வருடமாக தொடர்ந்து சுவாசித்த பின், நான் தப்புதல் எனும் துயரத்திற்குள் தப்பிவிடுவேன் .இது உண்மையில்லை .அன்பே,நான் பயப்படுகிறேன் ,ஆனால் அதை நீ பொருட்படுத்தாத மாதிரி செய்கிறேன் “. ரடுஷின்ச்கயாவின் இவ்வரிகள் எங்கள் போராளிகளுக்கு கச்சிதமாக பொருந்தும் .அவர்கள் பயமில்லாதது போல் ஒரு பாவனைகொண்டு அவர்களது அன்றாட கடமைகளை செய்வார்கள் , அவர்களது சகாக்களின் பாவனைகள் தாங்கள் கண்டுகொள்ளவில்லை எனும் பாவனையும் உண்டு .இவையெல்லாம் வெற்று பாசங்குகளல்ல .இது உண்மையில் ஒருவகை துணிவாகும் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கவனமாக புதிபித்துக்கொள்ளவேண்டிய நெஞ்சுரமிது .அநீதியும் கொடுமைகளும் கட்டமைக்கும் அச்சத்தை நாம் கட்டுடைத்து சுதந்திரம் அடையும் வரை இப்படிதான் விடுதலைக்காக போராடியாக வேண்டும் .

    அக்மாடோவா மற்றும் ரடுஷின்ச்கயா இருவரும் ரஷ்சியர்கள் ,ஹென்லே ஒரு பிரிட்டிஷார் .இருந்தாலும் கூட அடக்குமுறையை எதிர்த்து போராடி நீடிப்பது என்பதும் , தனது தலைவிதியை தானே எழுதவேண்டும் என்று எண்ணுவதும்,தனது ஆன்மாவிற்கு தானே தலைவனாக இருக்கவேண்டும் என்றேண்ணுவதும் அனைத்து இன தேச மக்களுக்கும் பொதுவானதே .மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டங்களும் கூட உலகெங்கிலும் வாழும் மனிதர்களுக்கு இருக்கும் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடே .

    இப்போராட்டங்களின் விளைவாக உலகின் பிற இடங்களில் விளைந்து  இருக்கும் உற்சாகம் பர்மாவிலும் விளைந்திருக்கிறது .துனிசியாவில் நடந்த டிசம்பர் 2010 கிளர்ச்சிக்கும் 1988 ல் இங்கு நடந்த கிளர்ச்சிக்கும் நெறைய ஒற்றுமைகள் இருப்பதால் இப்போராட்டங்கள் எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டுகின்றன.இரண்டு நிகழ்வுகளும் பார்வைக்கு மிக எளிய சாதாரண  சம்பவங்கள் மூலமே தொடங்கியது .அதுவரை வெளியுலகிற்கு அறிமுகமில்லாத சாதாரண பழ வியாபாரி  அடிப்படை மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை தனது சிறிய போராட்டத்தின் மூலம் உணர்த்தினார் .உயிரை காட்டிலும் மனிதனை அவனுக்கு உரிய மரியாதையோடு நடத்துவது எத்தனை முக்கியமென்பதை இவ்வுலகிற்கு உணர்த்தினார் அந்த எளிய மனிதர். இங்கு ,பர்மாவில் ஒரு டீக்கடையில் பலகலைகழக மாணவர்களுக்கும் அப்பகுதி வாழ் மக்களுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டது.போலீஸ் மாணவர்களிடம் பாரபட்சம் காட்டியதாக மாணவர்கள் கருதினர். அதனால் அதை கண்டித்து மாணவர்கள் போராடினர், அதன் விளைவாக போன் மாவ் எனும் மாணவர் மரித்தார் .இச்சிறு பொறி பெறும் தீயாக வளர்ந்து மக்கள் பர்மாவின் சர்வாதிகார அரசுக்கு எதிராக போராட துவங்கினர் .
    ஒரு நண்பர் சொன்னது இது , தான் சுமக்கும் வைக்கோல் சுமையை ஒருமுறை கண்டுகொண்ட ஒட்டகம் அதை இனியும் தாங்கிக்கொள்ள துணிவதில்லை .தகுதிக்கு மீறிய சுமையை தான் சுமப்பதாக உணர்ந்துகொண்ட ஒட்டகம் அந்நொடியில் சரிந்து விழுகிறது .அப்படி விழுவதன் மூலம் தன்னால் இனி இப்படிப்பட்ட சுமையை சுமக்க முடியாது என்று தனது மறுப்பை அது வெளிப்படுத்துகிறது .
    துநிசியாவிலும் பர்மாவிலும் இரண்டு இளைஞர்களின் மரணம் மக்களுக்கு தங்கள் மீது அளவுக்கு அதிகமாக சுமத்தப்படும் அநீதி மற்றும் அடக்குமுறையின் சுமையை உணர செய்தது .இளைஞர்கள் இயல்பாகவே சுதந்திரத்தை நாடுபவர்கள் .புதிதாக முளைக்கும் ரெக்கைகளை அகல விரிக்க முயல்வது அவர்களின் இயல்பே .ஆதலால் பர்மிய இளைஞர்களுக்கு துனிசிய புரட்சி பெறும் உற்சாகத்தை கொடுப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை .தங்களது வாழ்வை தீர்மானிக்கும் உரிமை தங்களிடமே இருக்கவேண்டும் என்று ஓர் பிரபல ராப் இசை கலைஞர் பொதுவெளியில் தனது கருத்துக்களை பதிவு செய்ததிலும் எவ்வித ஆச்சரியமுமில்லை .
    பர்மாவை பொறுத்தவரை இன்று இளம் ராப் இசை கலைஞர்களே இத்தலைமுறையின் மையம் எனலாம் .ஜனயாகத்தின் மேலும் மனித உரிமைகளின் மீதும் முழு நம்பிக்கை கொண்ட விதிகளற்ற ஓர் குழுமம் அவர்கள் .துறவிகளின் காவி புரட்சியை ஒட்டி பலரை சிறையிலடைத்தனர் .இப்பொழுதும் கூட ஒரு 15 பேர் சிறையில் வாடுகின்றனர் .இப்பொழுது தூக்கி எறியப்பட்ட துனிசிய அரசை போல் இந்த பர்மா அரசும் பொது வழக்கங்களுக்கு மாறான தீவிரமான இளைஞர்களை விரும்புவதில்லை .இந்த அரசின் கட்டுகோப்பான விதிகளுக்கு அவர்கள் சவாலனவர்கள் .சுதந்திரம் மேல் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு இந்த இளம் ராப் கலைஞர்கள் -அநீதி,அடக்குமுறை ,கடும் விதிமுறைகளை கடந்து துணிந்து நிற்கும் தங்களது எதிர்கால நம்பிக்கையின் சின்னமாக எண்ணுகின்றனர் .துநிசியாவிற்கும் பர்மாவிற்கும் உள்ள ஒற்றுமை என்பது உலகெங்கிலும் சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சுதந்திர வேட்கை என்பதே சில வேற்றுமைகளும் உண்டு, அவ்வேற்றுமைகளின் காரணமாகவே இவ்விரு புரட்சிகளின் முடிவும் வெவ்வேறானது .முதல் வேற்றுமை , துனிசிய ராணுவம் தம்மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை ,ஆனால் பர்மிய ராணுவம் நடத்தியது .இரண்டாவது ,மற்றும் மிக முக்கியமான வேற்றுமை ,துனிசிய புரட்சி தகவல் தொடர்பு தொழில்நுட்ப புரட்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டது .
    இது அவர்களின் போராட்டத்தை எளிதாக வழிநடத்த உதவியதோடு நில்லாமல் ,உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் அவர்களின் மீது ஈர்த்து நிலைபெற செய்தது .ஒவ்வொரு மரணமும்,ஏன் ஒவ்வொரு காயமும் கூட உலகத்திற்கு உடனடியாக சில நிமிடங்களிலேயே தெரியபடுத்தப்பட்டது.லிபியாவிலும் , சிரியாவிலும் இப்பொழுது ஏமனிலும் புரட்சியாளர்கள் ஆட்சியாளர்களின் அக்கிரமங்களை தொடர்ந்து உலகிற்கு அம்பலப்படுத்திய  வண்ணமிருக்கின்றனர் . ஒரு 13 வயது சிறுவனை சிரியாவில் வதைத்து கொல்லும் புகைப்படம் உலக அளவில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ,உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர் .சுதந்திரமான தொலை தொடர்பு வசதிகள்  மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இத்தகைய புரட்சி சாத்தியமானது .
    நாங்கள் துனிசியா மற்றும் எகிப்து தேசத்து மக்களை கண்டு பொறாமை படுகிறோமா ?என்றால்,நிச்சயமாக ,அவர்களது மாற்றம் மிக குறுகிய காலத்தில் அமைதியான முறையில்  நிகழ்ந்துள்ளது.ஆனால் இதை பொறாமை என்று சொல்வதை காட்டிலும் எங்களுக்குள் இது ஒரு ஒற்றுமையை உருவாக்கி ,சரியான  திசையில் நாங்கள் பயணிக்க எங்களுக்கு செயலூக்கம் அளிக்கிறது .மனிதர்களின் சமத்துவத்திலும் விடுதலையிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணின், ஒவ்வொரு பெண்ணின் லட்சியம் எதுவோ அதுவே எங்கள் லட்சியமும் ஆகும் .
    விடுதலையை நோக்கிய எங்களது பயணத்தில் நாங்கள் சுதந்திரமாக இருக்க பழகிக்கொள்கிறோம் .விடுதலையின் மீதிருக்கும் எங்களது நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்தியாக வேண்டும் . “உண்மையில் வாழ்வது ” என்று வாக்லாவ் ஹவெல் சொன்னது இதைத்தான் .எங்களது கடைமைகளை நாங்கள் சுய விருப்பத்தோடு செய்கிறோம் .சுதந்திரமற்ற நாட்டில் வாழ்ந்துக்கொண்டு சுதந்திர மனிதர்களை போல் வாழ முயல்வதில் இருக்கும் அபாயங்களை உணர்ந்தே இருக்கிறோம் .எதையும் தேர்வு செய்வதற்கான உரிமையை நாங்கள் சரியென்று நினைக்கும் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் நிலைநிருத்திகொள்கிறோம், அத்தேர்வின் விளைவாக வேறு பல சுதந்திரங்கள் பறிபோகும் சூழல் அமைந்தாலும் கூட .ஏனெனில் சுதந்திர உணர்வு சுதந்திரத்திற்கான வேட்கையாக தழைத்தோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் .  எங்களது என்.எல்.டி அலுவலகத்துக்கு வரும்படியின்றி வேலைக்கு வரும் அந்த வயதான பெண்களும் ,இளைஞர்களும் சுதந்திரத்திற்கான இந்த கடினமான பாதையை விருப்பத்தோடு தேர்ந்தெடுத்துள்ளனர் .
    நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நான் உங்களுடன் தொடர்பில் இருக்கும் சுதந்திரத்தை எண்ணி மகிழ்ச்சிகொள்கிறேன், என்னை மேலும் சுதந்திரமாக அது உணர செய்கிறது . மாக்ஸ் வேப்பர் அரசியல் கோட்பாடுகளின் படி அரசியல் எண்ணும் தொழிலில் எதிர்நிலை எடுத்து எதற்கும் இனங்காதிருத்தல் ஒரு கடமையாகும் நாங்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடுகிறோம் ,மீண்டும் மீண்டும் முனைப்போடு தொடர்ந்து முயற்சிக்கிறோம் .பொறுப்புணர்வோடும் நுண்ணுனர்வோடும் சாத்தியமற்ற இலக்கு என்று பலரும் ஒதுங்கும் இலக்கை நோக்கி படிப்படியாக பயணிக்கிறோம் .எங்களது சுதந்திர கனவை நினைவாக்க கண்களை அகல விரித்து போராடுகிறோம் .
    இந்த உரையை எனக்கு மிகவும் பிடித்த கிப்லிங்கின் வரிகளோடு நிறைவு செய்துகொள்ள விழைகிறேன் .இவ்வரிகளை எனக்கு கண்டுபிடிக்க உதவிய டிம் கார்டன் ஆஷ் அவர்களுக்கு எனது நன்றிகள் .
    “பேரரசனுக்கோர் இடங்கொடேன், அரசனுக்கோ வழிவிடுவேன்,
    போப்பிற்கான மகுடத்திற்கோ தலை வணங்கேன்,ஆனால் இஃது வேறன்றோ!
    வெறுங் காற்றின் வலிமையுடன் மோதமாட்டேன்.
    தம் கனவுகளை நனவாக்கிய இவரே நம் தலைவர்
    வாயிற்காப்போனே இவரை அனுமதி! அகழிப்பாலம் திறக்கப்படட்டும்”

    முதலுரை முற்றுபெறுகிறது
    -சுகி
    Related Posts Plugin for WordPress, Blogger...
    1 Comment

One Response to “இரும்பு திரைக்கு அப்பால்…ஆங் சண் சூகி”

  1. ravindran said on

    very good ! nalla pathivu

Leave a Reply